X

3 உலக சாதனைகள் படைத்த விராட் கோலி!

கர்நாடாக மாநிலம், பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் 18வது ஐபில் கிரிக்கெட் போட்டி நேற்று (ஏப்ரல் 24) இரவு நடைபெற்றது. இந்த 34வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி சதமடித்தார். அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 265 ரன்களைக் குவித்தது. ஐபிஎல் போட்டியில் 3 சதங்களை அடித்துள்ள சாய் சுதர்சன், இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 2,000 ரன்களைக் கடந்த கிரிஸ் கெயில் சாதனையை முறியடித்துள்ளார்.

இதன்பின் விளையாடிய பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி 44 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். படிக்கல் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.

இந்த ஆட்டத்தில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசிய விராட் கோலி, ஐபிஎல் கிரிக்கெட்டில் ஓர் அணிக்காக 300 சிக்சர் மற்றும் 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என சாதனையைப் படைத்தார். அத்துடன் ஒரே நாட்டில் விளையாடி டி20 போட்டிகளில் 10,000 ரன்களைக் குவித்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற இமாலய சாதனையைப் படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா 8563 ரன்கள் எடுத்துள்ளார்.