நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ள நிலையிலும், அக்கட்சியின் தலைவர் விஜயால் முதல்வராக முடியவில்லை. ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாதே காரணம்.
இதற்கிடையே, த.வெ.கவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், விஜயின் ஆதரவு 113 ஆக உயர்ந்தும் அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் ஆளுநரை சந்தித்து விஜய் ஆட்சியமைக்க அழைக்குமாறு கேட்டுக் கொண்டாலும், 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுத்தால் மட்டுமே ஆட்சியமைக்க அழைக்க முடியும், என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதே சமயம், விஜயை ஆட்சியமைக்க ஆளுநர் தடையாக இருப்பதாக தொல்.திருமாவளவன், கமல்ஹாசன், காங்கிரஸ் எம்.பி ஜோதி மணி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆளுநரை சந்தித்த விஜயிடம் ஆளுநர் கூறியது என்ன ? என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில்,
ஆட்சியமைக்க தேவையான அளவு பெரும்பான்மை த.வெ.கவுக்கு இல்லை. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இருப்பதை தவெக தலைவர் விஜய் நிறுவவில்லை. எனவே, ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமெனில் தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அர்லேகர் விஜயிடம் கூறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.