உலகிலேயே மிக விலையுயர்ந்த மாம்பழமாக உலகத்தாரை வியக்க வைக்கும் ஜப்பானின் புகழ்பெற்ற மியாசாகி (Miyazaki) மாம்பழம், தற்போது கர்நாடக மாநிலம் கொப்பல் (Koppal) பகுதியில் கிலோ வெறும் 3,000 ரூபாய்க்குக் கிடைத்து வருகிறது.
சர்வதேச சந்தையில் ஒரு கிலோ இரண்டரை லட்சம் ரூபாய் வரை விற்கப்படும் இந்த அரிய வகை மாம்பழத்தை, உள்ளூர் விவசாயிகள் பயிரிட்டு நல்ல லாபம் ஈட்ட வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு கர்நாடக மாநில தோட்டக்கலைத் துறை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு ஊக்கமளித்து கன்றுகளை வழங்கியது.
அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி விவசாயிகள் கஷ்டப்பட்டு இந்த ரக மாம்பழங்களை அமோகமாக விளைவித்த போதிலும், அறுவடைக்கு பின்புதான் அவர்களுக்கு ஒரு நிதர்சனமான உண்மை புரிந்தது; அதாவது, ஒரு கிலோ மாம்பழத்திற்குச் சர்வதேச விலையான இரண்டரை லட்சம் ரூபாயைக் கொடுத்து வாங்க உள்ளூரில் ஒரு நுகர்வோர் கூட தயாராக இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், வேறு வழியின்றி இந்த உயர் ரக மாம்பழத்தின் விலையைக் கிடுகிடுவெனக் குறைத்து, தற்போது கிலோ 3,000 ரூபாய் என்ற உள்ளூர் மக்களுக்கு ஏதுவான விலையில் விற்று வருகிறார்கள்!