X

உலகிலேயே முதல் முறையாக வழங்கப்பட்ட நவீன கண் அறுவை சிகிச்சை! – மும்பை மருத்துவருக்கு பார்வைத்திறனை மீட்டுத்தந்த டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை

இந்தியாவில் கண் மருத்துவத்தில் முதன்மை இடத்தை வகிக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, மும்பையைச் சேர்ந்த 44 வயதான பெண்கள் நல மருத்துவருக்கு வெற்றிகரமாகப் பார்வையை மீட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகக் கடுமையான குளுக்கோமா மற்றும் கண் தொடர்பான சிக்கல்களால் இரண்டு கண்களிலும் படிப்படியாக பார்வைத்திறன் குறைந்து, 2024-ல் முற்றிலுமாக பார்வையை இழந்திருந்தார். இதற்கு முன் பல அறுவை சிகிச்சைகள் செய்தும் பலன் கிடைக்காத நிலையில், டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனை இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இது உலகளவில் முதன் முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு மிகச் சிக்கலான அறுவைசிகிச்சை நிகழ்வாக கருதப்படுகிறது. நோயாளியின் இடது கண்ணில் ஏற்கனவே தவறான வகையில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை லென்ஸை (IOL) மருத்துவர்கள் அகற்றினர். பின்னர், ‘5F-ISHF’ எனும் நவீன உத்தியின் வழியாக, புதிய லென்ஸ் பொருத்தப்பட்டது. இதனுடன் கண்களின் முழுமையான குறைபாடுகளை சரிசெய்வதற்காக, கருவிழி மாற்று சிகிச்சை (OPK) மற்றும் கண் பாவை சீரமைப்பு ஆகியவையும் ஒரே சிகிச்சை அமர்வில் செய்யப்பட்டன.

அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே நோயாளிக்கு இடது கண்ணில் கணிசமான அளவு (6/24) பார்வைத்திறன் மீண்டும் கிடைத்திருக்கிறது. வாழ்க்கையையே மாற்றி அமைத்திருக்கும் இந்த பார்வைத்திறன் மீட்சியானது, அவர் தனது மருத்துவப் பணிக்கு மீண்டும் திரும்புவதற்கு வழி வகுத்திருக்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து அவரது கண் குணமடைந்து வருவதால், அவரது பார்வையில் இன்னும் அதிக முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் டாக்டர். அகர்வால்ஸ் ரெஃப்ராக்டிவ் மற்றும் கார்னியா பவுண்டேஷனின் இயக்குனர் & தலைவராகவும் மற்றும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் கண்புரை மற்றும் கண் அழுத்தச் சேவைகளின் மூத்த ஆலோசகருமான டாக்டர். சூசன் ஜேக்கப், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவச் சேவைகள் மண்டலத் தலைவர் டாக்டர் சௌந்தரி எஸ். மற்றும் விட்ரியோ ரெடினா துறையின் கிளினிக்கல் லீட் மற்றும் தலைவருமான டாக்டர் மனோஜ் காத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

டாக்டர் அகர்வால்ஸ் குழுமத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி மற்றும் முதுநிலை கண்சிகிச்சை நிபுணர் டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறுகையில், “பல ஆண்டுகள் பார்வைத் திறனின்றி அவதிப்பட்ட இந்த இளம் மருத்துவ நிபுணர் மீண்டும் அவரது பணிக்குத் திரும்புவதைப் பார்ப்பது உண்மையிலேயே எங்களுக்கு மகிழ்ச்சியும், பெருமிதமும் அளிக்கிறது. அதிக சிக்கலான ஒரு பாதிப்பு நேர்வுக்கான, பல அறுவைசிகிச்சை அணுகுமுறைகள் இதற்கு தேவைப்பட்டன. கண்ணின் சிதைந்த அமைப்பைச் சீரமைத்தல், புதிய லென்ஸைப் பாதுகாப்பாகப் பொருத்துதல் எனப் பல சிகிச்சைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டியிருந்தது. எங்கள் மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த நிபுணத்துவமும், சிறப்பான கட்டமைப்பு வசதிகளும் இதை சாத்தியமாக்கியது.” என்றார்.

சாதனை முயற்சியான இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்ட DARCF-ன் இயக்குனர் டாக்டர் சூசன் ஜேக்கப் கூறுகையில், “நோயாளிக்கு 2010-லிருந்தே குளுக்கோமா பிரச்சனை இருந்தது. கண் புரைக்கான அறுவைசிகிச்சை மற்றும் தாங்குதிசு நீக்கல் சிகிச்சை போன்றவற்றை பிற மருத்துவமனைகளில் செய்து கொண்ட போதிலும், அவரது பார்வைத்திறன் குறைந்து கொண்டே போனது. ஏறக்குறைய பார்வைத்திறனை முழுமையாக இழந்த நிலையில் அவர் எங்களிடம் சிகிச்சைக்கு வந்தார். அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த பழைய லென்ஸ் நகர்ந்து, கண்ணின் மற்ற பகுதிகளை அழுத்தியதே இதற்கு முக்கிய காரணம். நாங்கள் அந்த லென்ஸை அகற்றி, ‘5F-ISHF’ முறையில் புதிய லென்ஸைப் பாதுகாப்பாகப் பொருத்திப் பார்வையை மீட்டோம்,” என்றார்.

‘5F-ISHF’ என்பது டாக்டர் சூசன் ஜேக்கப் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நவீன தொழில்நுட்பமாகும். இதில் தையல் இல்லாமலும், பெரிய கீறல்கள் இல்லாமலும் மிகத் துல்லியமாகப் புதிய லென்ஸ் பொருத்தப்படும். கண்ணின் கட்டமைப்பிற்கு உட்புறத்தில் சரியாக இந்த லென்ஸ் பொருந்துவதால், நோயாளிக்குப் பாதுகாப்பான, நிலையானத் தீர்வு கிடைக்கிறது.