கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, ஏறத்தாழ 300 கோடி ரூபாய் செலவில் 7 ஏக்கர் பரப்பளவில் 7 தளங்களுடன் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு முதல்வர் ஜோசப் விஜய்யால் 2026 அக்டோபர் 16 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தில், நூல்கள் வாங்குவதில் மிகப்பெரிய அளவில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நூலகத்தின் நான்காம் தளத்தில் உள்ள தமிழ் நூல்களை ஆய்வு செய்த போது, இலக்கிய உலகிற்கு முற்றிலும் அறிமுகமில்லாத ‘அகல்விளக்கு பதிப்பகம்’ வெளியிட்ட சுமார் 1,800 போலி மற்றும் தரம் குறைந்த நூல்கள் அலமாரிகளை அலங்கரிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக 300 பக்கங்கள் கொண்ட புத்தகம் 350 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், இத்தகைய போலி நூல்கள் ஒவ்வொன்றும் ஏறத்தாழ 1,400 ரூபாய்க்கும் அதிகமான விலைக்குக் கொள்ளை லாபத்தில் விற்கப்பட்டு அரசுப் பணம் கோடிக்கணக்கில் சூறையாடப்பட்டுள்ளது.
சூர்யா பாலு எழுதிய ‘நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ நூலில், நாலடியாரைச் சமண முனிவர்களின் தொகுப்பு என்று அறியாமல் “நாலடியார் தமிழின் முக்கியமான கவி மற்றும் தத்துவ ஞானி” என்றும், ‘தேவ் நிலன்’ எழுதிய மதுரைக் காஞ்சி நூலில் மாங்குடி மருதனாரைக் குறிப்பிடாமல் “மதுரைக் கூழத்திப் பெருவழுதி என்ற புலவர் பாடியது” என்றும் எந்தவித வரலாற்று அடிப்படைக்கும் எட்டாத பச்சையான பிழைகளும் போலித் தகவல்களும் நூல் முழுதும் நிரப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஜனவரி மாதத்திலேயே புத்தகங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டதால் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், முந்தைய ஆட்சியின் பல்வேறு ஒப்பந்தங்களை ரத்து செய்து வரும் தமிழக வெற்றிக்கழக அரசு, இந்த நூல்கள் வாங்கும் ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பயன்பாட்டிற்கான உயர்மட்ட நூலகத்தில் நடந்துள்ள இந்த முறைகேட்டில் உண்மையில் ஊழல் நடந்திருப்பின், அதற்குப் பொறுப்பு முந்தைய திமுக அரசா, அதை ஆய்வு செய்யாமல் நடைமுறைப்படுத்திய தற்போதைய தமிழக வெற்றிக்கழக அரசா அல்லது இரு தரப்புமே கூட்டுப் பொறுப்பா என்ற பலத்த விவாதங்களும் காரசாரமான கேள்விகளும் எழுந்துள்ளன.