X

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – கடைகள், வர்த்தக நிறுவனங்களிடம் சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக வீடியோகிராபர் ராஜசேகரன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் 3டி லேசர் ஸ்கேனர் கருவி உதவியுடன் சாலையின் பல்வேறு இடங்களில் அளவீடு செய்தனர். அப்போது சம்பவ இடத்தில் இருந்து 100 அடி வரை அளவீடு செய்யப்பட்டது. இந்த சோதனை சுமார் 6½ மணி நேரம் நடந்தது.

நேற்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். காலை 7 மணிக்கு அங்கு வந்த அவர்கள் 3டி லேசர் ஸ்கேனர் கருவியை கொண்டு சாலையை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையின் வெவ்வேறு பகுதிகளில் வைத்து அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றன. இந்த அளவீடு செய்யும் பணியானது மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. சம்பவம் நடந்த இடத்தின் 2 பக்கங்களிலும் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றன. நேற்று காலை 7 மணி முதல் மாலை 4.30 மணி வரை 9½ மணி நேரம் இந்த ஆய்வு பணி நடந்தது.

இன்று 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. வேலுச்சாமிபுரத்தில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனத்தினர் உள்ளிட்ட 306 பேருக்கு ஏற்கனவே சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்த நிலையில் கரூர் சுற்றுலா மாளிகையில் தற்போது 10 வணிகர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

Categories: Uncategorized