குர்து போராளிகளுக்காக துருக்கியை மிரட்டும் அமெரிக்கா!

சிரியாவில் ஆதிக்கம் செலுத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவதற்கு அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு முதல்முறையாக அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில், சிரியாவில் ஐஎஸ் அமைப்பினரோடு போரிட்டு வந்த உள்ளூர் குர்திஷ் போராளிகளுக்கு உதவ அமெரிக்க துருப்புகள் அங்கு சென்றன.

அதன்பின்னர் அமெரிக்க படையினர், ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து வான்தாக்குதல்கள் நடத்தி, பல நகரங்களை அவர்களிடம் இருந்து மீட்டனர். அமெரிக்க படைகள் வருகைக்கு பிறகு அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெருத்த பின்னடைவை சந்தித்தனர்.

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், எனவே அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த மாத இறுதியில் அதிரடியாக அறிவித்தார். அதன்படி சிரியாவில் இருந்து அமெரிக்க வீரர்கள் வெளியேறி வருகிறார்கள்.

இதற்கிடையே தாங்கள் பயங்கரவாதக் குழுவாகக் கருதும் குர்திஷ் படைகள் மீது ராணுவத் தாக்குதல் தொடங்க உள்ளதாக அண்டை நாடான துருக்கி அறிவித்தது. இந்த விவகாரம், அமெரிக்கா, துருக்கி இடையே மோதல் போக்கை உருவாக்கி உள்ளது.

சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியாக துருக்கி நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்துவோம் என்றும், 20 மைல் சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதேசமயம், துருக்கியின் ஆத்திரத்தை தூண்டும் வகையில் குர்துக்கள் நடந்துகொள்வதை விரும்பவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தினால், துருக்கி மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கலாம் என தெரிகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools