கூட்டணி குறித்து பா.ஜ.க அமைச்சர் கருத்து! – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக அதற்கு எதிர்மாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு அதிமுக எம்பியும் மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை, செய்தியாளர்களை சந்தித்தபோது, பாஜகவுடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என கூறினார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு நேற்று ஆஜரான தம்பிதுரை, பாஜகவை விமர்சித்தார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது என்றும் பாஜக தலைவர்கள் தமிழக அரசை விமர்சிக்கும்போது மவுனமாக இருக்க முடியாது என்றும் கூறினார்.

இது ஒருபுறமிருக்க, பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறும்போது, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என்றார்.

இந்த நிலையில், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி தொடர்பாக மத்திய மந்திரி அத்வாலே மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரின் கருத்துக்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து ஜெயக்குமார் கூறியதாவது:-

அனைத்துக்கும் அதிமுக ஜால்ரா அடிக்காது, அன்னப்பறவை போல் பிரித்து பார்க்கும். எதிர்க்க வேண்டியதை எதிர்க்கும், ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கும்.

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல; பாஜக கூட்டணியில் உள்ளவர். எனவே, கூட்டணி தொடர்பாக, தனிப்பட்ட முறையில்தான் அத்வாலே கருத்து கூறியுள்ளார்; அது பாஜக தலைமையின் கருத்து அல்ல.

பாஜவை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே; அது அதிமுகவின் கருத்து அல்ல. தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.

தமிழகத்திற்கு நல்லது செய்பவர்களுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். தற்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools