X

டிரம்பின் நிர்வாக பணியாளர்கள் தலைவர் ஜான் கெல்லி ராஜினாமா!

அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாக பணியாளர்களின் தலைவராக இருந்து வருகிறார் ஜான் கெல்லி. அவர் இந்த மாதத்தின் இறுதியில் பதவி விலகுகிறார்.

முன்னாள் கடற்படை அதிகாரியான ஜான் கெல்லி (68 வயது) – ஜனாதிபதி டிரம்ப் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளிவந்தன. அவர் பதவி விலகுவதற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜான் கெல்லி தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.

இதனை வெள்ளை மாளிகையில் நிருபர்கள் மத்தியில் பேசிய ஜனாதிபதி டிரம்ப் உறுதி செய்தார். அப்போது அவர் கூறும்போது, “ஜான் கெல்லி விடைபெறுகிறார். அவர் ஓய்வு பெறுகிறாரா என எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் அவர் மகத்தான பணியாளர். ஆண்டின் இறுதியில் அவர் வெளியேறுகிறார்” என குறிப்பிட்டார்.

மேலும், “ அவரது இடத்துக்கு வரப்போவது யார் என்பது அடுத்த ஒன்றிரண்டு நாளில் அறிவிக்கப்படும். அவர் என்னோடு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இருந்துள்ளார்” என்றும் டிரம்ப் கூறினார்.