X

டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் – கருத்து கணிப்பில் தகவல்

டெல்லி மாநில சட்ட சபைக்கு வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் டெல்லியில் உச்சக்கட்ட அனல்பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே மும் முனைப்போட்டி நிலவுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது மும் முனைப்போட்டி ஏற்பட்டது. அப்போது மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் ஆம்ஆத்மி வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்தது.

பாரதிய ஜனதா கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. இந்த தடவை தேர்தலிலும் அதேபோன்று இமாலய வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி தலைவர்களின் தேர்தல் பிரசாரம், தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகள் டெல்லி மக்களை மிகவும் கவர்ந்துள்ளன. எனவே இந்த தடவையும் டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பு முடிவுகளும் அதையே பிரதிபலிக்கின்றன.

‘டைம்ஸ் நவ்’ தொலைக் காட்சி சார்பில் சமீபத்தில் டெல்லியில் 70 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதிலும் டெல்லி தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி அதிக இடங்களில் வெற்றி பெற்று மிக, மிக எளிதாக ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மிக்கு மொத்தம் உள்ள 70 இடங்களில் 54 முதல் 60 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. 52 சதவீதம் மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. என்றாலும் கடந்த 2015-ம் ஆண்டு கிடைத்த வாக்கு சதவீதத்துடன் ஒப்பிடுகையில் ஆம் ஆத்மிக்கு 2.5 சதவீதம் வாக்குகள் குறையும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சிக்கு 10 முதல் 14 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், அந்த கட்சிக்கு 34 சதவீதம் பேர் வாக்களிப்பார்கள் என்றும் தெரியவந்துள்ளது. 2015-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாரதிய ஜனதாவுக்கு இந்த தடவை 1.7 சதவீதம் வாக்குகள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. என்றாலும் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் டெல்லியில் 46 சதவீதம் வாக்குகளைப் பெற்ற பாரதிய ஜனதாவுக்கு 8 மாதங்களுக்குள் வாக்கு சதவீதம் கணிசமாக குறையும் என்று தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம். அந்த கட்சி 4 சதவீதம் வாக்குகளைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லி தேர்தலில் வேட்பாளர் தேர்வு, பிரசாரம் உள்ளிட்ட அனைத்திலும் காங்கிரஸ் மிக, மிக பின்தங்கி இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டு இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பில் வேறு சில ஆச்சரியப்படுத்தும் சுவாரசிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடத்தப்பட்டால் டெல்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளையும் பாரதிய ஜனதா கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் டெல்லி மக்கள் மத்திய அரசுக்கு ஒரு மாதிரியும் மாநில அரசுக்கு வேறொரு மாதிரியும் வாக்களிப்பது உறுதியாகி உள்ளது.

பிரதமர் பதவிக்கு யாரை விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 75 சதவீதம் பேர் நரேந்திர மோடியை தேர்வு செய்துள்ளனர். ராகுல் பிரதமர் ஆவதற்கு வெறும் 8 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா? எதிர்ப்பு தெரிவிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு 71 சதவீதம் பேர் மத்திய அரசின் முடிவுக்கு வலுவான ஆதரவை தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து டெல்லியில் நடந்து வரும் போராட்டம் தேவையற்றது என்று 52 சதவீதம் பேர் கூறியுள்ளதாக கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் இந்த கருத்துக்கணிப்பை கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி கடந்த 1-ந்தேதி வரை டைம்ஸ் நவ் நிறுவனம் நடத்தி இருந்தது.