டொனால்ட் டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி

தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்தவர் புஸ்சா கிரு‌‌ஷ்ணா (வயது 32). விவசாயியான இவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் அபிமானி ஆவார். தனது வீட்டிலேயே டிரம்புக்கு 6 அடி உயர சிலை அமைக்கும் அளவுக்கு அவரது அபிமானம் சென்றுள்ளது.

டிரம்பை கடவுளாக கருதி, அவரது சிலையை புஸ்சா கிரு‌‌ஷ்ணா தினமும் வழிபட்டு வருகிறார். சிலையின் நெற்றியில் பொட்டு வைத்து, மாலை அணிவிக்கிறார். அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டுகிறார். அப்போது, ‘ஜெய் ஜெய் டிரம்ப்’ என்று மந்திரம் உச்சரிப்பதுபோல் கூறுகிறார். கடந்த 14-ந் தேதி, டிரம்பின் 73-வது பிறந்தநாளையொட்டி, தனது வீட்டு சுவற்றில் டிரம்ப் சுவரொட்டியை புஸ்சா கிரு‌‌ஷ்ணா ஒட்டி இருந்தார்.

இதுபற்றி கிரு‌‌ஷ்ணா கூறுகையில், ‘‘டிரம்ப் ஒரு வலிமையான தலைவர். அவரது துணிச்சலான செயல்பாடு எனக்கு பிடிக்கும். எனவே, அவரை வழிபடுகிறேன். என்றாவது ஒருநாள் அவரை நான் சந்திப்பேன்’’ என்றார்.

டிரம்ப் சிலை அமைக்க கிரு‌‌ஷ்ணா ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலவிட்டதாகவும், கிராம மக்களுக்கு விருந்து வைத்ததாகவும் அவருடைய தாயார் தெரிவித்தார்.

இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகரீதியிலான மோதல் நடந்துவரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்தியர் ஒருவர் சிலை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools