X

தங்கம் இறக்குமதி வரியை உயர்த்தியது ஏன்? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தங்கம் இறகுமதி வரியை உயர்த்தியது ஏன்? என்பது குறித்து பிரபல டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், “நகை வியாபாரிகள், ஒரு வேளை, தங்கத்தை இறக்குமதி செய்து, அதை நகைகளாக தயார் செய்யும் போது, அவர்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும், ஊதியம் கிடைக்கும், அவர்களின் குடும்பங்கள் வாழும். எனவே இந்த தொழில் வளர வேண்டும். இந்த தொழில் மூலமாக உற்பத்தியாகக் கூடிய நகைகளை, ஏற்றுமதி செய்தால், நாட்டுக்கும் அன்னிய செலாவணி கிடைக்கும்.

ஆனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து, உள்நாட்டில் தங்க நகைகளை செய்து, விற்கிறீர்கள் என்றால் மீண்டும் அதே பிரச்சினைதான். தங்கத்தை ஒரு முதலீடாக பயன்படுத்துகிறோம். வங்கிகளில் போடுவதற்கு பதிலாக, தங்கமாக வாங்கி வைத்துக் கொள்ளலாம், எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும் என்று. இதனால் அன்னிய செலாவணி வெளியே போகிறது. தங்கம் சேமிப்புக்கு ஒரு விதம் என்று இல்லாமல், எத்தனையோ வேறு விதங்கள் இன்றுள்ளன.

அதனால், தங்கம் இறக்குமதி, நம் நாட்டு பயன்பாட்டுக்கு, அவ்வளவு தேவையா எனக்கருதி, இறக்குமதி மேல் வரி விதித்திருக்கிறோம். இதனால் நகை வாங்கக்கூடாது என்று அர்த்தமல்ல. ஆனால் அந்த பொருள் நம் நாட்டில் இல்லாத நிலையில், வெளிநாட்டில் இருந்து வரவழைத்தாவது, அதை வாங்கியே தீருவேன் என்றால், கொஞ்சம் வரியையும் கொடுங்கள் என்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.