X

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு அ.தி.மு.க. அரசை காப்பாற்றும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கொண்டு இருக்கிறார்.

ஆனால் இன்றைய சூழ்நிலையில் பாரதிய ஜனதா என்பது தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கட்சியாக உள்ளது.

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவுக்கு வெற்றிகரமான தோல்வி என்று தமிழிசை கூறி வருகிறார். அவர் விரக்தியில் இப்படி கூறி உள்ளார். பாரதிய ஜனதா கட்சி அழிந்து வருகிறது.

இது தமிழிசைக்கு நன்றாக தெரியும். எனவே தமிழிசை பாரதிய ஜனதாவில் இருந்து விலகி வேறு கட்சியில் சேர்ந்தால் தான் வார்டு அளவிலான தேர்தலில் வெற்றி பெற முடியும்.

கஜா புயல் நிவாரணத்துக்காக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட நெசவாளர்கள், துணி வகைகளை தயாரித்து வைத்திருந்தனர்.

ஆனால் தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.

இத்தகைய மோசடி பேர் வழிகளுக்கு வருகிற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். தினகரன் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சி மீது அக்கறை செலுத்த வேண்டாம். அவரது கட்சியே கரைந்து வருகிறது. தினகரன் அவரது கட்சியை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. சிலிண்டர் மானியம் கூட பல இடங்களில் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.