X

பண மோசடி வழக்கு – அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான ராஜ் தாக்கரே

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷியின் மகன் உன்மேஷ் கோகினூர் சி.டி.என்.எல். என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மராட்டிய நவநிர்மாண்சேனா தலைவர் ராஜ் தாக்கரே பங்குதாரராக இருந்தபோது ஐ.எல். அண்ட் எப்.எஸ். நிறுவனம் ரூ.450 கோடிக்கு கடன் மற்றும் பங்கு முதலீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக 22-ந் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு ராஜ் தாக்கரேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி நேற்று காலை 11.25 மணிக்கு ராஜ் தாக்கரே மும்பை கோட்டை பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார்.

அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரவு 8.15 மணி வரை சுமார் 9 மணி நேரம் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு ராஜ்தாக்கரே வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.