X

போலியான கால்செண்டர் மூலம் அமெரிக்கர்களை ஏமாற்றிய 2 பேர் கைது!

குஜராத் மாநிலம் கரஞ்ச் போலீஸ் நிலைய பகுதியில் உள்ள பங்கோர் நாகா என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தில் போலி கால்சென்டர் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த கட்டிடத்தின் மாடியில் இயங்கி வந்த அந்த அலுவலகத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

போலீஸ் சோதனையில் அங்கு அமெரிக்காவில் வாழும் மக்களின் தனிப்பட்ட தகவல்களை ‘மேஜிக் ஜேக்’ என்ற நவீன கருவி மூலம் திருடி, பல்வேறு சமூக வலைத்தள இணையதளங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஏமாற்றி ஆன்லைனில் பணம் பெற்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த கால்சென்டரை நடத்தி வந்த ஷாஹேசாத் பதான், புருசோத்தம் சிங் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அங்கு இருந்த மேஜிக் ஜேக் கருவி, லேப்டாப்கள், 3 செல்போன்கள் உள்பட பல கருவிகளையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.