X

மாநிலங்களவை எம்.பி பதவி கேட்டு ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த சுதீஷ்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்து போட்டியிட்டது.

அப்போது தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி தருவதாக அ.தி.மு.க. தரப்பில் பேசப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை.

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா இது தொடர்பாக சமீபத்தில் கூறுகையில், “கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தே.மு.தி.க.வுக்கு ஒரு எம்.பி. பதவியை அ.தி.மு.க. ஒதுக்கி தர வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

இதுபற்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்டதற்கு அ.தி.மு.க. தலைமை ஆலோசித்து தான் முடிவெடுக்கும் என்று கூறினார்.

இந்த நிலையில் தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ், அடையார் கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

இதேபோல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது வீட்டுக்கு சென்று எல்.கே. சுதீஷ் நேற்று சந்திதது பேசினார்.

இருவரிடம் தே.மு.தி.க.வுக்கு டெல்லி மாநிலங்களவை எம்.பி. சீட் ஒரு இடம் ஒதுக்கி தருமாறு கடிதம் கொடுத்ததாக தெரிகிறது.

டெல்லி மேல்-சபை எம்.பி. பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் சட்டசபை செயலாளரிடம் 6-ந்தேதியில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் 13-ந்தேதியாகும்.

அ.தி.மு.க.வில் மாநிலங்களவை எம்.பி. பதவி கேட்டு தம்பித்துரை, கே.பி.முனுசாமி, கோகுல இந்திரா, அன்வர்ராஜா, நத்தம் விசுவநாதன் என 5 பேர் கடும் பலப்பரீட்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் தே.மு.தி.க.வும் ஒரு இடம் கேட்பதால் அ.தி.மு.க. மேலிடம் யாருக்கெல்லாம் பதவி கொடுப்பது என யோசித்து வருகிறது.

எனவே 3 பேருக்கான வேட்பாளர் பட்டியல் கடைசி நேரத்தில்தான் வெளியிடப்படும். இந்த வாரம் பட்டியல் வெளியாக வாய்ப்பில்லை என்று மூத்த நிர்வாகிள் தெரிவித்தனர்.