மும்பையில் இன்று மிக அதிகமான மழை பெய்யும் – வானிலை எச்சரிக்கை

மும்பையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மும்பை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தபடி உள்ளன. இந்த நிலையில் மும்பையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. நாளை (10-ந்தேதி) வரை மும்பையில் தொடர் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் மும்பை நகர மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

ஏற்கனவே கடந்த வாரம் பெய்த மழை மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. நேற்றும், இன்றும் 2 நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருவதால் மும்பை மக்களின் தினசரி வாழ்க்கை முடங்கி உள்ளது. 60 சதவீதம் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் உள்ளனர்.

தொடர் மழை காரணமாக மும்பையில் வாகன போக்குவரத்திலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மழை தண்ணீர் வெள்ளம் போல் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிக்கும் நிலை காணப்படுகிறது. ரெயில் தண்டவாளங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

என்றாலும் பயணிகளின் நலன் கருதி மின்சார சேவைகள் மெல்ல நடந்து வருகின்றன. நேற்று மும்பையில் சிறிது நேரத்துக்கு விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தொடர் மழையால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவதி அதிகமாகி உள்ளது.

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் வழக்கத்தை விட இந்த சீசனில் கூடுதல் மழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணி முதல் தொடர்ந்து சுமார் 3 மணி நேரத்துக்கு கொட்டி தீர்த்த மழை மும்பையின் பல பகுதிகளை மீண்டும் மிதக்க வைத்து விட்டது. சாந்தாகுரூஸ் விமான நிலைய பகுதியில் மட்டும் நேற்று காலை 108 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.

மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் சராசரியாக 840 மி.மீ. மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இதுவரை 708 மி.மீ. பெய்து விட்டது. அதாவது 84 சதவீதம் மழையை சில நாட்களிலேயே மும்பை பெற்று விட்டது.

மும்பையில் ஆண்டுதோறும் பருவமழை சராசரியாக 2272.2 மிமீ அளவில் பெய்யும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரையில் 1315.7 மி.மீ. பெய்துள்ளது. இது, ஆண்டு சராசரி பருவ மழையில் 57 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

போதும், போதும் என்ற அளவுக்கு மழையை பெற்று விட்ட மும்பை மாநகருக்கு நாளையும் மிக பலத்த மழை வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் சேதம் ஏற்பட கூடும் என்று மும்பை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதையடுத்து மும்பையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools