மேற்கு தொடர்ச்சி மலைகளில் அனல் மின் திட்டங்களுக்கு அனுமதி இல்லை! – மத்திய அமைச்சர் அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி மகேஷ் சர்மா ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

மேற்கு தொடர்ச்சி மலை 1,500 கி.மீ. நீளம் கொண்டது. அதில், 56 ஆயிரத்து 825 சதுர கி.மீ. பரப்பளவு பகுதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மண்டலம், கோவா, குஜராத், கர்நாடகா, கேரளா, மராட்டியம், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் அமைந்துள்ளது.

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, 4-வது முறையாக இதுதொடர்பான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டல பரப்பை 50 ஆயிரம் சதுர கி.மீட்டராக குறைக்கும் திட்டம், மத்திய அரசுக்கு இல்லை.

இந்த மண்டல பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களை வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தும் திட்டமும் இல்லை. அங்கு விவசாயம் மற்றும் தோட்டத்தொழில் தங்குதடையின்றி நடைபெறும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டல பகுதியில், 5 வகையான புதிய மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கு தடை விதிக்குமாறு தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களுக்கு உத்தரவிட்டு உள்ளோம்.

சுரங்க திட்டம், குவாரி, மணல் குவாரி, அனல் மின் திட்டம், 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட கட்டுமான திட்டங்கள் ஆகியவற்றை அனுமதிக்க வேண்டாம் என்று கூறியுள்ளோம்.

இவ்வாறு மகேஷ் சர்மா கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools