ரஜினிகாந்த் மீதான வழக்கை திரும்ப பெற்றது வருமான வரித்துறை!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005-ம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரிக்கணக்குகளில் குறைபாடு இருந்ததாக வருமானவரித்துறை கூறியது. இதற்காக 2002-03-ம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003-04-ம் ஆண்டுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும், 2004-05-ம் ஆண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாயும் நடிகர் ரஜினிகாந்துக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த், வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ரஜினிகாந்த் கோரிக்கையை கடந்த 2013-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், வருமான வரித்துறை மேல்முறையீடு செய்து வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools