ரூ.25 ஆயிரத்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம்!

திருவிழாக்கள், பண்டிகை காலங்கள், திருமணம் போன்ற விசே‌ஷ நிகழ்ச்சிகளின் போது தங்க நகைகள் அணிவதை மக்கள் பெருமையாகவும், ஆடம்பரமாகவும் கருதுகிறார்கள். எனவே தங்கம் விலை அதிகரித்தாலும், அதன் மவுசு மட்டும் குறைவதே இல்லை.

இந்திய மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஆண்டுந்தோறும் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுவதால், அதன் விலை ஏறுமுகத்தில் செல்கிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும் நேரங்களிலும் தங்கம் விலையில் ‘கிடுகிடு’ உயர்வு காணப்படுகிறது.

இந்த நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக காணப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 121-க்கும், பவுன் ரூ.24 ஆயிரத்து 968-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு மேலும் ரூ.6 அதிகரித்து ரூ.3 ஆயிரத்து 127 ஆனது. இதன்மூலம் பவுன் ரூ.25 ஆயிரத்து 16 ஆக உயர்ந்து புதிய சரித்திரம் படைத்தது. தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை கடப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.

சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 922-க்கும், பவுன் ரூ.23 ஆயிரத்து 376-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஓராண்டில் பவுனுக்கு ரூ.1,640 விலை அதிகரித்துள்ளது. கடந்த 1930-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கம் 14 ரூபாய் 50 காசுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானி, நிருபரிடம் கூறியதாவது:-

அமெரிக்காவில் பொருளாதாரம், வேலைவாய்ப்பு குறியீடு சரிந்துள்ளது. அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பை மீறி அந்நாட்டு அதிபர் டிரம்ப், மெக்சிகோ எல்லையில் வேலி அமைப்பதால் பொருளாதாரத்தில் சரிவுநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே உலக சந்தையில் பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ.25 ஆயிரத்தை கடந்துள்ளது.

தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என்பதால், மக்கள் மத்தியில் முன்கூட்டியே தங்கத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் நகை விற்பனையில் பாதிப்பு ஏற்படவில்லை.

விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தால் மட்டுமே, தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. சென்னையில் கடந்த 24-ந் தேதி ஒரு கிராம் வெள்ளி 42 ரூபாய் 10 காசுக்கும், கிலோ ரூ.42 ஆயிரத்து 100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி 43 ரூபாய் 20 காசுக்கும், கிலோ ரூ.43 ஆயிரத்து 200 ஆகவும் விலை உயர்ந்து விற்பனை ஆனது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools