விஜய் வீட்டில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பிகில். விஜய்-அட்லி 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்ததாக திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நேற்று ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று வருமான வரித்துறை அதிகாரிகள், ‘பிகில்’ பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மேற்கொண்டு விசாரணைக்காக விஜய்யை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பின்னர், சென்னை சாலிகிராமம் மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 2வது நாளாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools