10 ஆம் தேதி முதல் போலீஸாருக்கு விடுமுறை கிடையாது!

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவம்பர் 17-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அதனால், அவர் விசாரித்து, தீர்ப்பை தள்ளி வைத்த வழக்குகளில், 17-ந்தேதிக்கு முன்பு தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.

அவற்றில் முக்கியமானது, அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு. 40 நாட்கள் தொடர் விசாரணைக்கு பிறகு, கடந்த 16-ந்தேதி இவ்வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தலைமை நீதிபதி தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளிக்க உள்ளது.

ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மத்திய அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்து கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதை மறுஆய்வு செய்யக்கோரி, முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளிக்கிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனு மீது தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளிக்கிறது.

ரபேல் விவகாரத்தில் ‘காவலாளியே திருடன்’ என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டு தெரிவித்ததாக தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்த 4 முக்கியமான வழக்குகளை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த வழக்குகளில் அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாக கருதப்படுகிறது.

இவ்வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டிஜிபி திரிபாதி நவம்பர் 10 தேதி முதல் மறு உத்தரவு வரும் வரைகாவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். மேலும் சட்டம் ஒழுங்கு பணிக்கு வெவ்வேறு இடங்களுக்கு செல்ல தயார்நிலையில் இருக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools