X

மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட 125 மாவட்டங்கள் இன்று 3 ஆக குறைந்துள்ளது – பிரதமர் மோடி பேச்சு

சத்தீஸ்கர் மாநிலம் உருவானதன் 25-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற ‘சத்தீஸ்கர் ரஜத் மஹோத்சவ்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் 14,260 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

சுமார் 50 ஆண்டாக நக்சல் பயங்கரவாதம் காரணமாக சத்தீஸ்கர் மக்கள் தாங்க முடியாத வலியை அனுபவித்தனர். அரசியலமைப்பை காட்டிக் கொண்டு, சமூக நீதி என்ற பெயரில் முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், சுயநலத்திற்காக உங்களுக்கு அநீதி இழைத்துள்ளனர். பல ஆண்டாக பழங்குடி கிராமங்களில் சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இல்லை. ஏற்கனவே இருந்தவை குண்டுகளால் தகர்க்கப்பட்டன. மருத்துவர்களும் ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். நாட்டை ஆண்டவர்கள், தங்கள் குளிர்சாதன வசதி கொண்ட அலுவலகங்களில் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு, உங்களை கைவிட்டனர்.

2014-ம் ஆண்டு நீங்கள் எங்களுக்கு வாய்ப்பு அளித்தபோது இந்தியாவை மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்க நாங்கள் உறுதிபூண்டோம். இன்று அதன் விளைவுகளை இந்த நாடு காண்கிறது. 11 ஆண்டுக்கு முன் இந்தியா முழுவதும் 125 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை மூன்றாகக் குறைந்துள்ளது.

மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தில் இருந்து இந்தியாவும், சத்தீஸ்கரும் முற்றிலும் விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.