X

த.வெ.க வேலூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 4900 பேருக்கு அனுமதி

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப். 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, தவெக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் வருகிற 23-ந் தேதி அன்று நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது, தற்போது நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்க 4,900 நிர்வாகிகளுக்கு க்யூ ஆர் கோடு வசதியுடன் கூடிய நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சீட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே நிர்வாகிகள் அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இது முற்றிலும் கட்சி நிர்வாகிகளுக்கான சந்திப்பு என்பதால், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலக்குறைவு உள்ள வர்கள் மற்றும் நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் நேரில் வருவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கட்சியின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை கருதி அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.