தமிழக அரசில் சுமார் 9 லட்சம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 1.4.2003-ந்தேதிக்கு முன்பு வரை அரசுப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
அதற்கு பிறகு வேலையில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது தவிர ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவினர் நேற்று தங்களது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.
இந்த அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுத்து அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார். இதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 6-ந்தேதி நடைபெற உள்ளது.
அன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட நாள் கனவுக்கு இதில் முடிவு கிடைக்குமா? என்பது அன்றைய தினம் தெரிய வரும்.