பெங்களூரு மாநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க லால்பாக் தாவரவியல் பூங்கா மற்றும் கப்பன் பூங்கா உள்ளிட்ட அரசு பூங்காக்களின் நிலப்பரப்பில் 5 சதவீதம் வரை பொது உள்கட்டமைப்பு மற்றும் சேவைத் திட்டங்களுக்காகத் திருப்பிக் கொள்ள வழிவகை செய்யும் “கர்நாடக அரசு பூங்காக்கள் (பாதுகாப்பு) திருத்தச் சட்டம், 2026”-க்கு எதிராக நகரின் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் நடைபயிற்சியாளர்கள் திரண்டு “Walk for Lalbagh” என்ற பெயரில் பிரம்மாண்ட எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக, ஹெப்பால் முதல் சென்ட்ரல் சில்க் போர்டு வரையிலான 17 கி.மீ சுரங்கப் பாதை திட்டத்திற்காக லால்பாக் பூங்காவின் சில ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தப்படவுள்ள சூழலில், “லால்பாக் ஒன்றும் துண்டு துண்டாக வெட்டிச் சாப்பிடும் பீட்சா அல்ல” என்றும், நகரின் பசுமைப் பகுதிகளை ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் திட்டங்களுக்குப் பலிகடாவாக்கக் கூடாது என்றும் பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க எம்பி தேஜஸ்வி ர்யா உள்ளிட்டோர் குரல் கொடுத்துள்ளனர்.
90 வயதான முன்னாள் சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் ஏ.என்.யெல்லப்பா ரெட்டி போன்ற நிபுணர்களும் இந்த 5% விதிமுறையைத் திரும்பப் பெறக் கோரி அரசுக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், அரசுத் தரப்பில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இத்திட்டத்தினால் பூங்காவின் ஒரு சிறிய பகுதி மட்டுமே தற்காலிகமாகப் பயன்படுத்தப்படும் என விளக்கமளித்த போதிலும், பெங்களூருவின் இயற்கைச் சூழலையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க இந்த சட்டத் திருத்தத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என மக்கள் உறுதியுடன் வலியுறுத்தி வருகின்றனர்.