ந்தியாவில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் அமைப்புகள், நிதி நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறை, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான நிறுவனங்கள், இணையச் சேவை வழங்கி நிறுவனங்கள் (ISPs) மற்றும் இணையப் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் 2027 மார்ச் மாதம் முதல் கட்டாயமாக இந்திய திட்ட நேரத்தையே (Indian Standard Time – IST) பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய அளவிலான உள்கட்டமைப்புகளில் துல்லியமான நேர ஒத்திசைவை (Time Synchronization) உறுதி செய்யவும், சைபர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதிலும் விண்வெளி மற்றும் தேசியப் பாதுகாப்புச் செயல்பாடுகளிலும் இருக்கும் நேர வேறுபாடுகளைக் களைவதற்கும் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தயாரித்துள்ள உள்நாட்டு “நாவிக்” (NavIC) செயற்கைக்கோள் கட்டமைப்பு மற்றும் டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தின் (NPL) அணு கடிகாரங்கள் (Atomic Clocks) மூலம் மிகத் துல்லியமான நேரச் சேவை வழங்கப்படவுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் தரவுகள் சேமிப்பு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நம்பகத் தன்மையை அதிகரிக்கவும், சர்வதேச அளவில் இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.