X

எடப்பாடி பழனிசாமி வீட்டில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் வாக்கெடுப்பில் கலந்து கொண்டது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

இதன் காரணமாக அதிமுகவிற்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரண்டு குழுக்களாக அக்கட்சி தற்போது செயல்படுகிறது. அத்துடன் தங்களது கொறடா உத்தரவை மீறி இருப்பதால் அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின்… கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் இரண்டு தரப்பினரும் மனு அளித்துள்ளனர். அதில், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கூறி ஐந்தில் இரண்டு பங்கு பேரிடம் கையெழுத்து பெற்று இருப்பதாக வேலுமணி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று (மே 19) கூட்டியுள்ளார். இந்த கூட்டம் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.