ஹுவாவே நிறுவனத்தின் ‘இன்டெலிஜென்ட் வேர்ல்ட் 2035’ (Intelligent World 2035) அறிக்கையின்படி, வரும் 2035 ஆம் ஆண்டிற்குள் உலகில் 900 பில்லியன் செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்டுகள் (AI Agents) உருவாக்கப்பட்டு, இணையப் போக்குவரத்து மற்றும் சர்வதேசத் தரவுப் பயன்பாட்டை 100 மடங்கு வரை உயர்த்தும் என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ஒரு மனிதனுக்கு 100 ஏஜென்ட்டுகள் என்ற விகிதத்தில் உருவாகி, இணையத்தில் நகரும் ஏஐ டேட்டாவில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இந்த ஏஐ ஏஜென்ட்டுகளே கையாளும் என்றும், மனிதர்களின் பயன்பாடு வெறும் 10 சதவீதமாகச் சுருங்கிவிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனிதர்கள் படிக்கும் மற்றும் சிந்திக்கும் திறனுக்கு ஒரு குறிப்பிட்ட எல்லை இருக்கும் நிலையில், பில்லியன் கணக்கிலான ஏஐ ஏஜென்ட்டுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தங்களுக்குள் வர்த்தகம் மற்றும் தரவுப் பரிமாற்றங்களைச் செய்து கொள்ளும் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
இதற்காகப் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Hyperscalers) ஏற்கனவே 2026-ல் மட்டும் 725 பில்லியன் டாலர் வரை முதலீடுகளைக் குவித்து வரும் சூழலில், எதிர்கால இணைய உலகம் மனிதர்களுக்கானதாக இல்லாமல், எந்திரங்களே எந்திரங்களுடன் பேசிக் கொள்ளும் முற்றிலும் புதிய டிஜிட்டல் தளமாக மாறவுள்ளது வல்லுநர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.