X

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை! – கருவில் இருக்கும் சிசுவிற்கு திறந்தநிலை கருவறை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்

புதுடெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை மருத்துவர்கள், கருவில் இருக்கும் சிசுவிற்கு இந்தியாவின் முதல் திறந்தநிலை கருவறை அறுவை சிகிச்சையை (Open Fetal Surgery) வெற்றிகரமாகச் செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

கர்ப்பத்தின் 25-வது வாரத்தில் இருந்த சிசுவிற்கு ஏற்பட்டிருந்த ‘ஸ்பைனா பிஃபிடா’ (Spina Bifida) எனப்படும் தீவிர முதுகுத்தண்டுவடக் குறைபாட்டைச் சரிசெய்ய இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஆறு மணி நேரம் நீடித்த இந்தச் சிகிச்சையில், முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் ‘லம்போசாக்ரல் மைலோமெனிங்கோசில்’ (Lumbosacral Myelomeningocele) எனப்படும் மிகவும் தீவிரமான நரம்புக் குழாய் குறைபாடு வெற்றிகரமாகச் சரிசெய்யப்பட்டது.

முதுகெலும்பில் உள்ள திறப்பின் வழியாக முதுகுத்தண்டுவடமும் அதன் உறைகளும் வெளியே துருத்திக்கொண்டிருப்பதோடு, மூளைத் தண்டுவடத் திரவம் கசிந்து கொண்டிருந்த இந்த அபாயகரமான குறைபாட்டை, சிசு தாயின் கருவறையில் இருக்கும்போதே மருத்துவர்கள் துல்லியமாகச் சரிசெய்துள்ளனர்.

பிறப்பதற்கு முன்பே சிசுவின் நரம்பியல் பாதிப்புகளைத் தடுத்து ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யும் இந்தச் சாதனை, இந்திய மருத்துவத் துறையின் வளர்ச்சியில் ஒரு மாபெரும் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.