ஆந்திர பிரதேசத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் 2026 ஆம் ஆண்டு, ஜூன் 2 முதல் அமராவதி ஆந்திராவின் தலைநகரமாக சட்டப்பூர்வமாக மாறும்.
2014 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகராக விளங்கிய ஐதராபாத் தெலுங்கானா வசம் சென்றது. எனவே ஆந்திர பிரதேசத்துக்கு அமராவதி தலைநகராக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது.
ஆனால், 2019 ஆம் ஆண்டு அங்கு ஆட்சி அமைத்த ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு ஒரு தலைநகரம் என்பதற்கு பதிலக 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தது. ஆனால், 2024 தேர்தலில் வென்ற சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அமராவதியை மீண்டும் தலைநகராக்கியது.
இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது ஒப்புதலும் கிடைத்துள்ளது. இதனை தெலுங்கு தேசம் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.