X

ஆப்பில் நிறுவனத்தின் ‘ஆப்பிள் பே’ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை இந்தியாவில் தொடங்கியது

ஆப்பிள் நிறுவனம் தனது ‘ஆப்பிள் பே’ (Apple Pay) டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் செப்டம்பர் 30 முதல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஆக்சிஸ் வங்கியுடன் (Axis Bank) இணைந்து தொடங்கப்பட்டுள்ள இச்சேவையின் மூலம் ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் பயனர்கள் விசா மற்றும் மாஸ்டர்கார்ட் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி எளிதாகப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

ஃபேஸ் ஐடி (Face ID), டச் ஐடி (Touch ID) அல்லது பாஸ்கோடு மூலம் உறுதிசெய்யப்படும் இந்த முறையில், கார்டு எண்கள் சாதனத்திலோ அல்லது ஆப்பிள் சர்வர்களிலோ சேமிக்கப்படாமல் ‘சிகியூர் எலிமெண்ட்’ சிப் மூலம் பாதுகாக்கப்படுகிறது. தற்போது யுபிஐ (UPI) வசதி சேர்க்கப்படாவிட்டாலும், தொடர்பு இல்லாத ‘டேப் அண்ட் பே’ (Contactless Tap and Pay) தொழில்நுட்பம் மூலம் கடைகளிலும் ஆன்லைன் தளங்களிலும் கடவுச்சொல் அல்லது ஓடிபி தேவையின்றிப் பாதுகாப்பாகப் பணத்தைச் செலுத்த முடியும்.

இந்தியாவில் கூகுள் பே, பேடிஎம் போன்ற தளங்களுக்குப் போட்டியாக களமிறங்கியுள்ள இச்சேவை, எதிர்காலத்தில் பிற வங்கிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.