அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் 24 வது நாளாக தொடர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. இந்த எச்சரிக்கை பதிலடி கொடுத்த ஈரான், தங்களது மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு சொந்தமான மற்றும் அமெரிக்கா தொடர்புடைய எரிவாயு திட்டங்கள், தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்தது.
இதற்கிடையே, ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல் திட்டம் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, ஆக்கப்பூர்வமாக விவாதம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் தொடருவதற்காக தாக்குதல் திட்டம் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில், டிரம்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஈரான், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், ஈரானின் பதிலடிக்கு அஞ்சியே அமெரிக்கா பின்வாங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும், என்று இஸ்ரேல் பிரதமர் தெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அமெரிக்க ராணுவத்தின் ஆதரவால் ஈரான் உடனான போரில் முக்கிய இலக்குகளை அடைய வாய்ப்புள்ளது. ஆகவே ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும். ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும் அணுசக்தி திட்டத்தையும் தொடர்ந்து நசுக்குவோம். லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீதும் தாக்குதல்களை தொடருவோம்.” என்று தெரிவித்துள்ளார்.