X

பிஸ்லெரி குடிநீர் குடிப்பதற்குப் பாதுகாப்பற்றது! – இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி குடிநீர் நிறுவனமான பிஸ்லெரி (Bisleri) தயாரித்த பாட்டில் குடிநீர் மாதிரி குடிப்பதற்குப் பாதுகாப்பற்றது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அறிவித்துள்ளது.

பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் வளாகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மினரல் வாட்டர் அல்லாத தொகுக்கப்பட்ட குடிநீர் மாதிரியை ஆய்வகத்தில் பரிசோதித்தபோது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ‘புரோமேட்’ (Bromate) எனும் ரசாயனம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.

குடிநீரைச் சுத்திகரிக்க ஓசோன் வாயுவைப் பயன்படுத்தும்போது உருவாகும் இந்த புரோமேட் ரசாயனம் அதிகளவில் இருந்தால் சிறுநீரகப் பாதிப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த மாதிரி பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பிஸ்லெரி நிறுவனம் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, பரிந்துரை உணவு ஆய்வகத்திற்கு (Referral Food Laboratory) மாதிரி அனுப்பப்பட்டு மீண்டும் பரிசோதிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட ஆய்வகச் சோதனையிலும், அந்தக் குடிநீரில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ‘பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள்’ (PAHs) இருப்பது உறுதி செய்யப்பட்டு மீண்டும் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

இரு ஆய்வக முடிவுகளும் உணவுப் பாதுகாப்பு விதிமீறல்களை உறுதிப்படுத்தியதால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் கீழ் பிஸ்லெரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர FSSAI அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.