X

ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக ஆட்டிசம் மையத்தை தொடங்கிய சென்னை ஐஐடி!

சென்னை ஐஐடியில் (IIT Madras) ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வர்ம சிகிச்சையை (Integrated Varmam Therapy) அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வதற்காக புதிய உறக்க ஆய்வு மையம் (Sleep Study Facility) மற்றும் ஆட்டிசம் ஆய்வகம் (Autism Lab) தொடங்கப்பட்டுள்ளது.

ஜோத்பூர் எய்ம்ஸ் (AIIMS Jodhpur) மருத்துவமனையுடன் இணைந்து இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது. ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்கனவே 800-க்கும் மேற்பட்ட ஆட்டிசம் குழந்தைகளுக்கு இந்த ஒருங்கிணைந்த வர்ம சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. பாரம்பரிய வர்ம மருத்துவ முறையின் செயல்திறனை நவீன அறிவியல் மற்றும் மருத்துவ அளவுகோல்களின் அடிப்படையில் துல்லியமாக மதிப்பீடு செய்வதே இந்த ஆய்வகத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் மூளை செயல்பாடு, நரம்பியல் மாற்றங்கள் மற்றும் உறக்க முறைகளில் ஏற்படும் முன்னேற்றங்களை நவீன கருவிகள் மூலம் கண்காணித்து ஆவணப்படுத்த இந்த மையம் உதவுகிறது. பாரம்பரிய மருத்துவ அறிவையும் நவீன உயிரி மருத்துவப் பொறியியல் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலம் ஆட்டிசம் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் புதிய சிகிச்சை வழிமுறைகளை உருவாக்க இந்தக் கூட்டு முயற்சி வழிவகுக்கும்.