தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுடன் புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது. ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ்- பாஜக இணைந்து தேர்தலை சந்திக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதாக பாஜக-வின் தேர்தல் மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.
அதன்படி என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் போட்டியிடும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த 2021-ல் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டன. என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.