இந்தியா கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுத்தமான தலைவர் என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மணி சங்கர் அய்யர் தெரிவித்திருந்தார். மேலும் நேருவுக்கு பின் பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றவர் காமராசர். ஆனால் காமராசர் தனக்கு ஆங்கிலம், ஹிந்தி தெரியாது என மறுத்தார். இன்று ஸ்டாலினும் அதேபோன்ற சூழலில்தான் இருக்கிறார் என நினைக்கிறேன்.
நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு, கூட்டணியை ஒருங்கிணைக்க ஒரு ஆளுமை தேவை. ஸ்டாலின் வெற்று அரசியல் முழக்கங்களை எழுப்பிவருபவர் அல்ல. கடந்த சில வருடங்களாக அவர் பேசிவரும் ஒவ்வொரு தத்துவமும் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது. நாட்டின் முக்கியமான பிரச்சனைகளையே பேசுகிறார். எனவே ராகுல் பிரதமராக ஸ்டாலினால் துணைநிற்க முடியும். அவர் திறமையானவர். அந்தத் திறன் ஸ்டாலினிடம் மட்டும்தான் உள்ளது. ராகுல் காந்தியின் பிரதமர் பதவிக்கு அவர் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார். எனவும் தெரிவித்தார்.
மேலும் இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இந்தியா கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்மொழிந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
“இந்தியா கூட்டணியிலேயே வலுவாக இருப்பது திமுகதான். ஏனெனில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. காங்கிரஸிற்கு 10 உறுப்பினர்களை தந்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரஸிற்கு இந்த வலு இல்லை. அதனால் மு.க.ஸ்டாலின் வெளியேறிவிட்டால் இந்தியா கூட்டணி என்பது எழுத்தில் மட்டும்தான் இருக்கும். வேறு எந்த வலுவான தலைவர்களும் அந்த அணியில் இருக்கமாட்டார்கள். கூட்டணியில் இருந்து மம்தா ஏற்கனவே வெளியேறிவிட்டார். கூட்டணியில் இருந்தால்கூட சிலர் தனித்தே தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்த சூழலில் ஸ்டாலினும் வெளியேறிவிட்டால், இந்தியா கூட்டணி எங்கு இருக்கும்? இந்தக் கூட்டணியில் தற்போது வலுவாக இருப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். என தெரிவித்தார்.