தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற்கும் பொதுக்கூட்டங்களில் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், மார்ச் முதல் வாரத்தில் நடைபெற்ற தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தின் போது, விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம் மற்றும் பரப்புரை நிகழ்ச்சி இம்மாதம் தொடக்கத்தில் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற விஜய், அங்கிருந்து சாலை மார்கமாக தஞ்சாவூர் சென்றார். அப்போது விஜயின் வாகனத்தை ரசிகர்கள் பலர் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்தார்கள். இதில் திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி அருகே சென்றபோது, திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், பின்னால் வந்தவர்கள் மோதியதில் முன்னால் சென்ற கார் மீது மோதியது.
இந்த விபத்தில் விக்னேஷும், அவரது நண்பர் அருணும் காயமடைந்தனர். மாணவர் விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 19 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவர் விக்னேஷ் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.