நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 101-வது ஆண்டு விஜயதசமி விழாவில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், இந்தியாவில் சதித் திட்டங்கள் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரசியல் சூழலில் நிலவும் பதற்றங்களையும், பிரான்ஸ், அல்பேனியா, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ந்த வன்முறைப் போராட்டங்களையும் சுட்டிக்காட்டிய அவர், இதேபோன்ற முயற்சிகள் இந்தியாவிலும் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க சில சக்திகள் முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட மோகன் பகவத், ஆட்சி மாற்றம் மட்டுமே ஒரு நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையாது என்றார். மக்களின் ஒற்றுமையும், சமூகத்தின் வலிமையும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவை என்றும் வலியுறுத்தினார்.
ஜனநாயகத்தில் போராட்டங்கள் நடத்துவது இயல்பானது என்றாலும், அவை சமூகத்தில் பிளவுகளையும் பகைமையையும் உருவாக்கும் வகையில் அமையக் கூடாது என்று அவர் தெரிவித்தார். போராட்டங்களில் ஈடுபடுவோர் நாட்டின் சட்டங்களையும் ஒழுங்கு விதிகளையும் மதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், தேர்தல் ஆதாயங்களுக்காகவோ, விளம்பரம் தேடுவதற்காகவோ மக்கள் இயக்கங்கள் பயன்படுத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், தெருக்களில் போராடுவதால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடாது என்றார்.
சமூகத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்குப் பரஸ்பர புரிதல், பேச்சுவார்த்தை மற்றும் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் மூலமே நீடித்த தீர்வுகளைக் காண முடியும் என்றும் மோகன் பகவத் வலியுறுத்தினார்.