X

அக்வான் புயல் அப்டேட்! – கரையை கடக்கும் துல்லியமான இடம் குறித்த தெளிவான முடிவு இன்னும் எட்டப்படவில்லை

கடந்த நவம்பர் 13-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தொடர்ந்து வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ள நிலையில், இன்றைய தினம் பிற்பகலில் ‘அக்வான்’ (Akvan) புயலாக உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளது;

வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மூன்று நாட்களுக்கும் மேலாக நிலைகொள்ளும் இப்புயல், இன்றைய தினம் பெரும்பாலும் வடக்கு திசையை நோக்கி நகர்ந்து தீவிரமடையும் என்றும், நாளைய தினம் முதல் வடமேற்கு திசையிலோ அல்லது சில வானிலை மாதிரிகளின் கணிப்புப்படி வடக்கு-வடமேற்கு திசையிலோ நகரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் அக்வான் புயல் ஆந்திர கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகப் பெரும்பாலான கணிப்புகள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தாலும், கரையைக் கடக்கும் துல்லியமான இடம் குறித்த தெளிவான முடிவு இன்னும் எட்டப்படவில்லை;

இருப்பினும், ஏற்கனவே கடந்த முரசு (Murasu) புயலின் போது நிகழ்ந்ததைப் போலவே, இந்த அக்வான் புயலும் வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு எவ்வளவு நெருக்கமாக வருகிறது என்பதைப் பொறுத்து, வரும் நவம்பர் 18-ஆம் தேதி இரவு மற்றும் 19-ஆம் தேதி ஆகிய நாட்களில் சென்னை உள்ளிட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த மழை எவ்வளவு பரவலாக இருக்கும் மற்றும் மழையின் அளவு எவ்வளவு இருக்கும் என்பதற்கான துல்லியமான விடைகள் இப்போது கிடைக்கவில்லை என்றாலும், நாளை காலை நிலவரப்படியான நிகழ்நேர வானிலை மாற்றங்களைக் கொண்டே அதற்கான தெளிவான பதில்களைப் பெற முடியும்.