இந்தியாவில் பரம்பரை விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் ஒரு புரட்சிகரமான மரபணு சிகிச்சை கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் 4,000 பேரில் ஒருவருக்கும், இந்தியாவில் 1,000 பேரில் ஒருவருக்கும் ஏற்படும் ‘ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா’ (Retinitis Pigmentosa – RP) எனப்படும் பரம்பரை விழித்திரை நோயால் இந்தியாவில் மட்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிழப்பு அபாயத்தில் உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸில் உள்ள ‘நானோஸ்கோப் தெரபியூட்டிக்ஸ்’ (Nanoscope Therapeutics) நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ‘மோஜென்ரி’ (MOGENRY / MCO-010) எனப்படும் ஒளியியல் மரபணு (Optogenetic gene therapy) சிகிச்சையை உருவாக்கியுள்ளனர்.
2026-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற ‘ஆப்டோஜெனெடிக்ஸ்’ (Optogenetics) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தச் சிகிச்சை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நோயால் பாதிக்கப்பட்ட பழுதடைந்த மரபணுவைச் சரிசெய்வதற்குப் பதிலாக, விழித்திரையில் உயிரோடு எஞ்சியிருக்கும் செல்களுக்குள் ஒளியை உணரும் தன்மை கொண்ட புதிய மரபணுவை ஒருமுறை செலுத்தும் ஊசி (One-time injection) மூலமாகச் செலுத்துகிறது. இதன் மூலம், இழந்த ஒளி ஏற்பிகளுக்குப் (Photoreceptors) பதிலாக எஞ்சியிருக்கும் விழித்திரை செல்களே ஒளியை உணர்ந்து மூளைக்குப் பார்வை சமிக்ஞைகளை அனுப்பி, நோயாளிகளுக்குப் பயனுள்ள பார்வையை மீண்டும் மீட்டுத் தருகின்றன.
இந்தத் திட்டத்தின் முக்கிய ஆய்வுகளை வழிநடத்திய டெல்லி பல்கலைக்கழக முன்னாள் மாணவியும் இந்திய வம்சாவளி விஞ்ஞானியுமான சவுரவ் மொஹந்தி (Saurav Mohanty), எந்த மரபணுக் கோளாறால் பார்வை இழந்திருந்தாலும் அனைவருக்கும் பார்வையை மீட்டுத் தரும் முதல் சிகிச்சை இதுவே என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்தச் சிகிச்சையின் முதல் மனித மருத்துவப் பரிசோதனை ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள ஜேபிஎம் ரோட்டரி கிளப் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JPM Rotary Club of Cuttack Eye Hospital and Research Institute) வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதில் அதிக அளவு (High dose) சிகிச்சை அளிக்கப்பட்ட 8 நோயாளிகளில் 7 பேருக்குப் பார்வைத் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தச் சிகிச்சைக்கு அமெரிக்காவின் எஃப்.டி.ஏ (US FDA) அமைப்பு ஒப்புதல் ஆய்வுக்காக விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டுள்ளதோடு, ஜப்பான், ஐரோப்பா மற்றும் சவுதி அரேபியாவிலும் அரிய நோய்க்கான சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
மேலும், முதியவர்களின் பார்வையிழப்புக்கு முக்கியக் காரணமாக விளங்கும் வயது மூப்பு சார்ந்த மாகுலர் சிதைவு (AMD) நோயைக் குணப்படுத்த ‘எம்சிஓ-020’ (MCO-020) என்ற அடுத்தகட்ட ஆய்விலும் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மரபணுப் பரிசோதனை வசதிகள் குறைவாக உள்ள இந்தியாவைப் போன்ற நாடுகளில், பார்வையற்றோரின் வாழ்வில் சுயமாக நடமாடும் சுதந்திரத்தையும் புதிய ஒளியையும் இந்த மருத்துவக் கண்டுபிடிப்பு நிச்சயம் கொண்டு வரும்.