டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் அருகில் கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இது தற்கொலை படை தாக்குதல் என என்ஐஏ உறுதி செய்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் என கண்டறியப்பட்டது.
அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணியாற்றி அவர் பணியாற்றி வந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த மற்ற மருத்துவர்கள், மற்றும் வியாபாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இன்று கைது செய்துள்ளது. புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முஸாமில் ஷகீல், அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் அதீல் அகமது ராதர், லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத், ஷோபியான் பகுதியைச் சேர்ந்த முஃப்தி இர்பான் அகமது வாகே என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாட்டியாலா நீதிமன்றத்தின் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவின் பேரில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தேசிய புலனாய்வுத் துறையால் 4 பேரும் விசாரணைக்காக காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். டெல்லி பயங்கரவாத தாக்குதலில் இந்த 4 பேருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
இதில் மருத்துவர்கள் 3 பேரை ஏற்கெனவே ஜம்மு காஷ்மீர் காவல்துறை கைது செய்து வைத்திருந்த நிலையில் அவர்கள் என்ஐஏ காவலுக்கு மாற்றப்பட்டனர். முன்னதாக டெல்லியில் வெடித்த காரின் உரிமையாளர் அமீர் ரஷித் அலி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கிய ஜஸிர் பிலால் என்பவர்கள் ஏற்கெனவே என்ஐஏவால் கைதுசெய்யப்பட்டனர்.