டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள குடிசை வாசிகள் மார்ச் 6ம் தேதிக்குள் அங்கிருந்து காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் இல்லம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலை பகுதி, டெல்லியின் மிக முக்கியமான பாதுகாப்பு வளையத்திற்குள் வருகிறது.
எனவே அங்கு அமைந்துள்ள பாய் ராம் முகாம், மஸ்ஜித் முகாம், டி.ஐ.டி முகாம் ஆகியவற்றில் உள்ள குடிசைவாசிகள் காலி செய்யுமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. மார்ச் 6-க்குள் காலி செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது.
வெளியேற்றப்படும் குடும்பங்களுக்குப் புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ், வடமேற்கு டெல்லியில் உள்ள சாவ்தா கெவ்ரா பகுதியில் நிரந்தர வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டெல்லி மேம்பாட்டு ஆணையம் மற்றும் டெல்லி நகர்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய ஆய்வின் அடிப்படையில், தகுதியுள்ள 717 குடும்பங்களுக்கு ஏற்கனவே பிளாட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக 2025 அக்டோபரில் நோட்டீஸ் அளிக்கப்பட்டபோது, இந்த விவகாரம் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. சட்டபூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றி வெளியேற்றத்தை மேற்கொள்ளுமாறு நவம்பர் 13, 2025 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மாற்று இடமாக வழங்கியுள்ள ‘சாவ்தா கெவ்ரா’ பகுதி, தற்போதைய ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளது. இதனால் அங்கிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.