X

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் தொனியிலும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாகத் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த மார்க்கண்டேயன், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்குச் சில முக்கிய நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

விதிக்கப்பட்ட நிபந்தனைகள்: “இனிவரும் காலங்களில் பொதுவெளியிலோ மேடைகளிலோ மிரட்டல் விடுக்கும் வகையில் பேச மாட்டேன்” என மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க வேண்டும். தூத்துக்குடி காவல் நிலையத்தில் நாள்தோறும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.