உணவுப் பொருள் தயாரிப்பில் பிரபலமான எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ், லால்ஜி கோதூ (எல்ஜி) ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் பெருங்காயத் தூள் தரமற்றவை என்றும், விதிகளை மீறி உற்பத்தி செய்யப்பட்டவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எவரெஸ்ட் நிறுவனம் தயாரிக்கும் பெருங்காயத் தூளின் அனைத்து வகையும் உணவு ஆய்வக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவை தரமற்றவை, தவறாக முத்திரையிடப்பட்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
உணவுப் பொருள் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ஆல்கஹாலில் கரையக்கூடிய சாறின் அளவு குறைந்தபட்சம் 5 சதவீதம் இருக்க வேண்டிய நிலையில், எவரெஸ்ட் பெருங்காயத் தூள் மாதிரிகளில் 3 சதவீதம் மட்டுமே இருந்தது.
அதேபோல, அதன் மஞ்சள் கலவை பெருங்காயத் தூளில் 3.29 சதவீதமும், கருப்புக் கலவை பெருங்காயத் தூளில் 4.4 சதவீதமும் மட்டுமே ஆல்கஹால் சாறு அளவு பதிவானதால், இவையும் தரமற்றவை என்று கண்டறியப்பட்டன. இதன்மூலம் தயாரிப்பில் தேவையான அளவு அசல் பெருங்காயம் சேர்க்கப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
எல்ஜி பெருங்காயத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மாவுச்சத்து 15 முதல் 32 சதவீதம் வரை அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரு நிறுவனங்களின் அனைத்து வகையான பெருங்காயத் தூள் விற்பனைக்கும் உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தையில் ஏற்கெனவே விற்பனைக்கு இருக்கும் தரம் குறைந்த பெருங்காயத் தூளை நிறுவனங்கள் தாமாக முன்வந்து திரும்பப் பெறவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த முறைகேடுகளை சரிசெய்து, விதிமீறல்களுக்கான விளக்கத்தை அளிக்கவும், தரத்தை சரிசெய்வதற்கான திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தரக் கட்டுப்பாட்டு விதிகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வரை விற்பனைக்கான தடை அமலில் இருக்கும். தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.