X

பூமி கண்காணிப்பு செயற்கைகோளை செப்டம்பர் 4 ஆம் தேதி விண்ணில் ஏவும் இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது மிகவும் லட்சியமிக்க ‘ஜூசாட்-1 ஏ என்று அழைக்கப்பட்ட ‘இ.ஒ.எஸ். 5’ என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட்டில் பொருத்தி வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுகிறது.

இது வழக்கமான குறைந்த புவிச் சுற்றுப்பாதைக்கு மாறாக, சுமார் 36 ஆயிரம் கி.மீ உயரத்தில் உள்ள புவி நிலைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தின் மீது எப்போதும் நிலைத்திருப்பதால், இது இந்தியாவின் நிலப்பரப்பைத் தொடர்ச்சியாகவும், நிகழ்நேரத்திற்கு அருகிலும் படம்பிடித்துக் கண்காணிக்கும். இதில் மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் வகை அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் இது 19-வது ராக்கெட்டாகும்.

பேரிடர் மேலாண்மை குறிப்பாக வெள்ளம், புயல், நிலச்சரிவு மற்றும் காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்களை உடனுக்குடன் கண்காணித்து தகவல்களை வழங்கும். பயிர் வளர்ச்சி, காடுகளின் பரப்பளவு மாற்றம் மற்றும் நீர்நிலைகளின் நிலவரத்தை கண்காணிக்க உதவும்.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளை தொடர்ச்சியாக கண்காணித்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான முக்கியத் தரவுகளை வழங்கும். இது புவிசார் சுற்றுப்பாதையில் இருந்து இந்தியாவை கண்காணிக்கும் நாட்டின் முதல் ‘இமேஜிங்’ செயற்கைக்கோள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.