மாம்பழம், வாழைப்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்களைச் செயற்கை முறையில் பழுக்க வைப்பதற்காகக் ‘கால்சியம் கார்பைடு’ (Calcium Carbide) எனும் வேதிப்பொருளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அபாயம் கொண்ட இந்தக் கால்சியம் கார்பைடைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்குப் மாற்றாக எத்திலீன் வாயுவைப் (Ethylene gas) பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தைகளில் பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கும் கூடாரங்களில் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தி, விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) அறிவுறுத்தியுள்ளது.