த.வெ.க-வுக்கு காங்கிரஸ் ஆதரவளித்ததை கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்திருந்த இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் அலீம் அல் புகாரி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்கள் விஜய்யின் தவெக வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற சூழல் உருவானது. இப்படிப்பட்ட நிலையில் தவெக கூட்டணியில் முதல் கட்சியாக காங்கிரஸ் இணைந்தது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தவெகவுக்கு ஆதரவளித்தது. அடுத்து வரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை தவெக உடனான கூட்டணி தொடரும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் இந்த செயலுக்கு, அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல்புகாரி எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கொள்கைப் பிடிப்பே அரசியல், சந்தர்ப்பவாதம் அல்ல. இதே சந்தர்ப்பவாதத்தை பாஜகவும் அதிமுகவும் செய்து வருகிறது. இப்போது நாம் அதை செய்யக்கூடாது” எனக் கூறியிருந்தார்.
மேலும் காங்கிரஸ் பற்றி கடுமையாக விமர்சித்து இருந்தார். இதையடுத்து இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அலிம் அல்புஹாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அலிம் அல்புஹாரி அறிவித்த நிலையில், நேற்று திமுகவில் இணைந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அலீம் அல் புகாரி திமுகவில் இணைந்தார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யமொழி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.