X

கிர் காடுகளில் தொடரும் சிங்கங்களின் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஆசிய சிங்கங்கள் இருக்கின்றன. இந்த சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் இதை அழிந்துவரும் இனங்களில் ஒன்றாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

இந்த வனப்பகுதியில் கடந்த மாதம் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலான காலத்தில் 11 சிங்கங்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அடுத்த சில தினங்களில் மேலும் 3 சிங்கங்கள் உயிரிழந்தன.

இதற்கிடையே, கிர் வனப்பகுதியின் தல்கானியா பகுதியில் நோய்வாய்பட்ட நிலையில் இருந்த 7 சிங்கங்கள் மீட்கப்பட்டு வனத்துறை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டன. ஆனால், சிகிச்சை பலனின்றி அவை அனைத்தும் உயிரிழந்தன. இதனால் பலியான சிங்கங்களின் எண்ணிக்கை 21 ஆனது.

இந்நிலையில், நேற்று இரண்டு சிங்கங்களை மீட்டு வனத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவை இறந்து போயின. இதைத்தொடர்ந்து, கிர் காட்டில் உயிரிழந்த சிங்கங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக முதல் மந்திரி விஜய் ரூபானி கூறுகையில், இது எதிர்பாராத நிகழ்வு. ஒவ்வாமையால் கிர் காட்டில் 20 முதல் 22 சிங்கங்கள் வரை இறந்துள்ளன. டெல்லி, புனேவில் இருந்து மருத்துவர்கள் வராவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும். அஜாக்கிரதையாக இருந்த வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.