X

ஹிட்லரும் மு.க.ஸ்டாலினும் ஒன்று: அன்புமணி கடும் விமர்சனம்

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காலம் கொடூரமானவர்களை அடையாளம் காட்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மகளிர் இட ஒதுக்கீட்டு சட்ட மசோதாவை தோற்கடிக்கச் செய்தது மட்டுமின்றி, அதை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடியிருப்பது அவரது சாடிச மனப்பான்மையைத் தான் வெளிப்படுத்துகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது 1941 முதல் 1945 வரையிலான காலகட்டத்தில் ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப் பட்ட ஐரோப்பிய பகுதிகளில் வாழ்ந்த 90 லட்சம் யூதர்களில், மூன்றில் இரு பங்கினரான 60 லட்சம் யூதர்களை ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் இனஅழிப்பு செய்தார்.

கொத்துக் கொத்தாக யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட போதெல்லாம் அதைக் கண்டு ரசித்ததாகவும், மகிழ்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது. கொடுங்கோலர் ஹிட்லரின் இந்த சாடிசமும், மு.க.ஸ்டாலினின் நவீனகால சாடிசமும் ஒன்று தான்; இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

வன்மக் கிடங்கு மு.க.ஸ்டாலினும் அவரது சகாக்களும் மகளிருக்கான வரலாற்று வாய்ப்பைக் கெடுத்து விட்டார்கள். மக்களவையில் மகளிர் பிரதிநிதித்துவம் இப்போது வெறும் 13.6% (74 பேர்) ஆகவே உள்ளது. இந்த நிலையை மாற்றுவதற்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பைக் கெடுத்த மு.க.ஸ்டாலின் துரோகக் கருப்புப் பக்கங்களில் தான் இடம் பெறுவார். அவரை மகளிர் சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.